நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி

கிறைஸ்ட்சர்ச், ஜன. 22 நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் 4 போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 38, பாபர் அஸம் 13, பகர் ஸமான் 33, சாஹிப்ஸதா பர்ஹான் 19, அப்பாஸ் அப்ரிடி 14 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுத்தி, மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் 135 ரன்கள்எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணி 17.2 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூஸிலாந்தின் பின் ஆலன் 22, டிம் செய்பர்ட் 19, வில் யங் 12, கிளென் பிலிப்ஸ் 26 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் இப்திகார் அகமது 3, ஷாகீன் அப்ரிடி, முகமது நவாஸ் ஆகியோர் தலா 2, ஸமன் கான், உசாமா மிர்ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது. இருந்தபோதும் டி20 தொடரை நியூஸிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆட்டநாயகனாக பாகிஸ்தான் வீரர் இப்திகாரும், தொடர்நாயகனாக ஃபின் ஆலனும் தேர்வு செய்யப்பட்டனர்