
குமுளி, மே 2- சித்திரை முழுநிலவு திருவிழாவையொட்டி, மங்கலதேவி கண்ணகி பச்சை பட்டு உடுத்தி சிலம்பு ஏந்தி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். வாழும் பெண் தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில் மயில் பீலி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கல தேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. மதுரையை எரித்துவிட்டு வைகை ஆற்றங்கரை வழியே தலைவிரி கோலமாக வந்த கண்ணகிக்கு, கோவலன் மங்கலநாண் பூட்டி இங்கிருந்து விண்ணுக்கு அழைத்துச் சென்றதாக ஒரு நம்பிக்கை. இதனால், கணவனை இழந்தாலும் மங்கலதேவி கண்ணகி என்ற பெயரிலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி வழியாக 6.6 கி.மீ. தூரம் நடைபாதை வழியாகவும், கேரளாவின் குமுளி, கொக்கரகண்டம் பகுதியில் 14 கி.மீ. ஜீப் பாதை வழியாகவும் செல்லலாம். கோயில் அமைந்துள்ள இடம் வனப்பகுதி என்பதால் சித்திரை மாத முழுநிலவன்று ஒரு நாள் மட்டும் வழிபாட்டுக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, கோலாகலமாக நேற்று விழா நடைபெற்றது. இங்கு கண்ணகிக்கு சிதிலமடைந்த சிலையே இருப்பதால் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை அம்மனுக்கு உருக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, தமிழகம் சார்பில் பூசாரி ராஜலிங்கம் அம்மனுக்கு சர்வ அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கையில் சிலம்பு, வளையல், மங்கலநாணுடன் கண்ணகி காட்சியளித்தார். பச்சைப் பட்டுடன் அருள்பாலித்த மங்கலதேவியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.





















