Home செய்திகள் தேசிய செய்திகள் மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்சநீதிமன்றம் கேள்வி

மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, அக். 12-
நீதிமன்ற உத்தரவை மீறி டெல்லியில் 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்காக அதிகாரிகள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் போராட்டங்களை ஒட்டி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், கைது நடவடிக்கைகளுக்கு எதிரான மனுக்களை நீதிபதிகள் ஜாய் மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது. நீதிமன்ற உத்தரவை மீறி 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதாகவும், இதற்காக மத்திய உள்துறைச் செயலர், டெல்லி காவல் ஆணையர், மெட்ரோ நிறுவனத் தலைவர் ஆகியோர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தினர். அமைதியாகப் போராடியவர்கள், வழக்கறிஞர்கள், கட்சித் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். “ஜனநாயக நாட்டில் அமைதியாகப் போராட உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்பிய அவர்கள், உச்சநீதிமன்றத்துக்கு வெளியேயும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். மெட்ரோ சேவை நிறுத்தப்படவில்லை என்றும், கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டதாகவும், தற்போது அனைத்து நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.