
கொல்கத்தா: மே 9-
நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் தொடர்ச்சியான 15 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தி மேற்குவங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜகவின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியை வீழ்த்திய இந்த சுவேந்து அதிகாரி யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தை போல் மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 147 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் 207 தொகுதிகளில் பாஜக வாகை சூடியது. முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். 15 ஆண்டு மம்தா ஆட்சி முடிவு அதுமட்டுமின்றி முதல்வர் மம்தா பானர்ஜியியும் தேர்தலில் தோற்றார். பாபனிபூர் தொகுதியில் களமிறங்கிய மம்தா பானர்ஜி மொத்தம் 58,812 ஓட்டுகள் வாங்கினார். அவரை எதிர்த்து களம் இறங்கிய பாஜகவின் சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகள் வாங்கி மம்தா பானர்ஜியை 15,105 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் மேற்கு வங்கத்தில் கடந்த 2011, 2016, 2021 என்று 3 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. அதோடு மேற்கு வங்க வரலாற்றில் முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டது. அதில் புதிய முதல்வராக மம்தா பானர்ஜியை வீழ்த்திய சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இன்று சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வராகவும், மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராகவும் இன்று பதவியேற்றார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, சுவேந்து அதிகாரிக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி பங்கேற்பு இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பிற அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பிற பாஜக தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். பதவியேற்பையொட்டி விழா நடக்கும் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. யார் இந்த சுவேந்து அதிகாரி இன்று முதல்வராக பொறுபேற்ற சுவேந்து அதிகாரி மேற்கு வங்க மாநிலத்தின் மெதினிபூர் மாவட்டம் புர்வா பகுதியில் பிறந்தவர். 56 வயது ஆகிறது. இவரது குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பமாகும். இவரது அப்பா சிசிர் அதிகாரி முன்னாள் எம்பி. இதனால் சுவேந்து அதிகாரி தொடககத்தில் காங்கிரஸில் பயணித்தார். அதன்பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவாகும்போது அந்த கட்சியில் சேர்ந்தவார். படிப்படியாக மம்தா பானர்ஜியின் நம்பிக்கையை பெற தொடங்கினார்.


















