
புதுடில்லி, அக். 12- இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று நாடாளுமன்றக் குழுத் தலைவரும், பாஜக எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே எச்சரித்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், “ஸ்டார்லிங்கால் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலைகளுடன் போட்டியிட முடியாது என்று சிலர் கூறுகின்றனர். மறுபுறம், ஸ்டார்லிங்க் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர். வெளிப்படையான போட்டி நிலவுவது இந்தியக் குடிமக்களுக்கு நன்மை பயக்கும். விலையை சந்தை நிலவரமே தீர்மானிக்கும். அதற்கேற்ப நாங்கள் மாறிக்கொள்வோம். அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களே, நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான பாஸ் என்பதை உணராததற்கு என் மன்னிப்பைக் கோருகிறேன்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். மஸ்கின் இந்தப் பதிவுகளுக்கு கண்டனம் தெரிவித்த நிஷிகாந்த் துபே கூறியதாவது: “பாதுகாப்பு விதிகளில் சமரசம் இல்லை. இந்தியா ஆரோக்கியமான, இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடாகும். சமூக வலைதள அழுத்தங்களுக்குப் பணிந்து, தனது பாதுகாப்புக் கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ளாது. நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாங்கள் நடத்திய ஆய்வுகளில், ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள் நிறுவனங்களால் நாட்டின் பாதுகாப்பு முகமைகள், உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் இணைய வசதியை எலான் மஸ்க் முதலில் வழங்க வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் இந்தியாவை அவரால் வளைக்க முடியாது” என்று தெரிவித்தார்.













