Home செய்திகள் தேசிய செய்திகள் அனைத்தும் கடவுளின் அருள்: தந்தை உருக்கம்

அனைத்தும் கடவுளின் அருள்: தந்தை உருக்கம்

புதுடில்லி, அக். 3-
கடவுளின் ஆசியால், ஸ்மித் மச்சார் பிளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையைச் சமாளித்தார் என்று அவரது தந்தை பூபேந்திர மச்சார் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மற்ற பெற்றோர்களைப் போலவே எங்களுக்கும் முதலில் பயமும் அச்சமும் ஏற்பட்டது. உடனடியாகக் கடவுள் முன்பு விளக்கேற்றி வழிபட்டோம். இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள யாருக்கும் பயிற்சி கிடையாது.
ஆனால், கடவுளின் அருளால், மகனுக்குள் இருந்த சக்தி அவரை வழிநடத்தியது.
பிரச்னை எழுந்தபோது தனது திறனை முழுமையாகப் பயன்படுத்தி அதைச் சமாளித்தார். கடவுளின் அருளால் இது நடந்தது. காயங்கள் குணமடைய சிறிது காலம் ஆகும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தையல் போடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து துல்லியமான விவரங்களையும் வழங்க முடியாது. ஆனால்,
காயங்கள் தீவிரமானவை; குணமடைய சிறிது காலம் தேவைப்படும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஸ்மித் மச்சார் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வருகிறார். அந்த காலகட்டத்தில் பல விமானிகளுக்கு வழிகாட்டியுள்ளார்.
விமானம் ஓட்டுவதுதான் அவரது வாழ்க்கை. தனது வேலையைத் தவிர வேறு எதைப் பற்றியும் அவர் சிந்திப்பதில்லை என்றும் பூபேந்திர மச்சார் தெரிவித்தார். ஸ்மித் மச்சார் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றியபோது அவருடன் வேலை செய்த விமானி டீனா கோஸ்வாமி கூறியதாவது: ஸ்மித் பணிவான, மரியாதைக்குரிய மனிதர். அவர் அனைவரையும் மதிப்பார். அனைத்து சூழ்நிலைகளையும் கையாள விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பயிற்சி வகுப்பு நடைபெறும். ஸ்மித் உடனடியாகச் செயல்பட்டார்.
அதற்கான பயிற்சி அளிக்கப்படலாம்; ஆனால் அதைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவது கடினம். எந்த சூழ்நிலையையும் குழுவாகவே கையாள்வோம். ஒருவர் விமானத்தை ஓட்டுவார்; மற்றொருவர் வழிநடத்தல், தொடர்பு மற்றும் சரிபார்ப்புப் பட்டியலைக் கவனிப்பார். விமானி அறையில் இருவர் மட்டுமே இருப்பார்கள். பிளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து விமானி அறைக்குள் இருந்தது. சமயோசித சிந்தனையுடனும் வீரத்துடனும் ஸ்மித் செயல்பட்டது பாராட்டத்தக்கது. சரியான நேரத்தில் பயிற்சியைப் பயன்படுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.