Home செய்திகள் தேசிய செய்திகள் அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை

அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை

புதுடெல்லி, ஜூன் 6- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்கரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக இன்று பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு சிஜேபி இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே, அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்திறங்கி நேரடியாகப் போராட்டக் களத்தில் இணைந்துள்ளார். இதேவேளையில் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) நகரில் அமைந்துள்ள அபிஜீத்தின் வீட்டிற்கு திடீரெனப் போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அபிஜீத் திப்கே கைது செய்யப்படுவார் என்ற கேள்வி இருந்த நிலையில் தற்போது அவரது அவுரங்காபாத் வீட்டிற்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. எதற்காக? டிசிபி கொடுத்த விளக்கம் சத்ரபதி சம்பாஜிநகர் நகரின் வாழுஜ் எம்ஐடிசி (Waluj MIDC) தொழில்பேட்டை பகுதியில் தான் அபிஜீத் திப்கேயின் வீடு அமைந்துள்ளது. அபிஜீத் திப்கே அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதைத் தொடர்ந்து, இந்த வீட்டைச் சுற்றிலும் திடீரெனப் போலீஸ் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு உள்ளது. இது குறித்துத் விளக்கம் கொடுத்துள்ள மண்டலம் 1-ன் காவல் துணை ஆணையர் (DCP Zone 1) பங்கஜ் அதுல்கர், “அபிஜீத் திப்கே இந்தியா வந்தடைந்துள்ள சூழலில், அவரது வீட்டின் முன்பாகத் தேவையில்லாத கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கையாக இந்த கூடுதல் பாதுகாப்புப் படை நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால், தற்போதைய சூழலை ஆய்வு செய்து கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.