Home மாவட்டங்கள் பெங்களூர் பெண் குழந்தை கொலை: தந்தை கைது

பெண் குழந்தை கொலை: தந்தை கைது

பெங்களூரு: ஜூலை 24-
பெண் குழந்தை பிறந்த ஒரே காரணத்திற்காக, 13 நாட்களேயான பிஞ்சு மூச்சை தண்ணீர்த் தொட்டியில் (சம்ப்) மூழ்கடித்துப் படுகொலை செய்த கொடூரத் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் 13 நாட்களுக்கு முன்பு இவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த இம்ரான், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இரவில் மனைவி முஸ்கான் அருகில் தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தையைத் தாய்க்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகத் தூக்கிச் சென்ற இம்ரான், வீட்டின் முற்றத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் வீசியுள்ளார். நள்ளிரவில் விழித்த தாய் குழந்தை காணாமல் பதறியபோது, ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறி குடும்பத்தினருடன் சேர்ந்து தேடுவது போல நாடகமாடியுள்ளார்.
சந்தேகமடைந்து தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றிப் பார்த்தபோது, குழந்தை சடலமாகக் கிடந்தது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்துத் தகவலறிந்து வந்த சிக்கபள்ளாப்பூர் நகர போலீசார் விசாரணை நடத்தினர். குடும்பத்தினரின் வாக்குமூலத்தில் சந்தேகம் அடைந்த மாவட்ட எஸ்பி குஷால் சௌக்சே தலைமையிலான போலீசார், இம்ரானிடம் கெடுபிடி விசாரணை நடத்தினர். அதில், பெண் குழந்தை என்பதால் தானே தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றதாக இம்ரான் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.