அவனியாபுரம், பாலமேடு, சூரியூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 2100 காளைகள்

மதுரை : ஜனவரி 17-
பொங்கலை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 2,100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. திமிறிய மாடுகளின் திமிலை அடக்கிய வீரர்களுக்கு கார், டிராக்டர் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்டும். மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் நாளான நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஒரு சில காளைகள் மைதானத்தில் நின்று விளையாடி கெத்து காண்பித்தன. மருத்துவ மற்றும் உடல் தகுதி பரிசோதனைக்கு பின் 939 காளைகள் களமிறக்கப்பட்டன. 564 வீரர்களும் களமாடினர். போட்டி முடிவில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகன், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், அமைச்சர் பி.மூர்த்தி காரினை முதல் பரிசாக வழங்கினார். 2ம் பரிசாக 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி, டூவீலர் பரிசு பெற்றார்.
சிறந்த காளையாக அவனியாபுரம் விருமாண்டி சகோதரர்களின் மந்தை முத்துகருப்பன் மாடு தேர்வு செய்யப்பட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் டிராக்டர் பரிசை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். இரண்டாம் பரிசாக அவனியாபுரம் ஜி.ஆர்.கார்த்திக்கின் காளை தேர்வு செய்யப்பட்டு தங்கக்காசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 58 பேர் காயமடைந்தனர். பொங்கல் திருநாளின் தொடர்ச்சியாக மாட்டுப்பொங்கலான நேற்று மதுரை மாவட்டம், பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்றுத்திடலில் அமர்க்களமாக ஜல்லிக்கட்டு நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர். இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் வெங்கடேசன், பூமிநாதன், எஸ்பி அரவிந்த், டிஆர்ஓ அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வீரர்கள் 50 பேர் வீதம் ஒவ்வொரு சுற்றுக்கும் களமிறங்கினர். வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷத்துடன் வெளியேறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு அடக்கினர். மொத்தம் 465 வீரர்கள் களமிறங்கினர். 861 காளைகள் அவிழ்த்து விட்டதுடன் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.