Home மாவட்டங்கள் பெங்களூர் ஆகஸ்ட் 30-க்குள் கிரேட்டர் பெங்களூர் தேர்தலை நடத்த தீவிரம்

ஆகஸ்ட் 30-க்குள் கிரேட்டர் பெங்களூர் தேர்தலை நடத்த தீவிரம்

பெங்களூரு: ஜூலை 2-
பெங்களூரு மாநகரத்தின் புதிய நிர்வாக அமைப்பான ‘கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பு’ எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் தயாரிப்புகளில் கர்நாடக மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தற்பொழுது போர்க்கால அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன
கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப்பிறகு பெங்களூருவில் உள்ளாட்சி அமைப்புக்குத் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதிக்குள் இந்தத் தேர்தலை கண்டிப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இறுதி வாய்ப்பாகக் கெடு விதித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தேர்தல் களம் தற்பொழுது மிகவேகமாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 18 ஆண்டுகள் பழமையான பிரஹத் பெங்களூரு மகாநகர பாலிகே அமைப்பு அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பெங்களூருவின் நிர்வாக வசதிக்காகவும், மக்கள் தொகை பெருக்கத்தைக் கையாள்வதற்காகவும் ‘கிரேட்டர் பெங்களூரு நிர்வாகச் சட்டம் 2024’-இன் கீழ் ‘கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பு’ உருவாக்கப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின்படி, ஒட்டுமொத்த பெங்களூரு நகரும் 5 புதிய மாநகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:

  1. பெங்களூரு மத்திய மாநகராட்சி
  2. பெங்களூரு வடக்கு மாநகராட்சி
  3. பெங்களூரு தெற்கு மாநகராட்சி
  4. பெங்களூரு கிழக்கு மாநகராட்சி
  5. பெங்களூரு மேற்கு மாநகராட்சி
    369 வார்டுகள் – 89 லட்சம் வாக்காளர்கள்:
    இந்த 5 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட மொத்தம் 369 வார்டுகளுக்கு தற்பொழுது தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதன் படி சுமார் 89 லட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் நடத்துவதற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    கர்நாடகாவில் அண்மையில் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார், பெங்களூரு பகுதியைச் சேர்ந்த தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். “நீதிமன்றக் கெடுவுக்குள் தேர்தலைச் சந்தித்து பெரும் வெற்றியைப் பெற வேண்டும்” என அவர் உத்தரவிட்டுள்ளார். வார்டு வாரியாக நிலவும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் வாக்காளர்களின் மனநிலை குறித்து அரசியல் கட்சிகள் தற்பொழுது கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளதால் பெங்களூருவில் தேர்தல் காய்ச்சல் இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.