
பெங்களூரு: ஜூலை 2-
கர்நாடகாவில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்கள் ஊதியத்தை உயர்த்தக் கோரி கடந்த சில வருடங்களாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். போக்குவரத்து ஊழியர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு இனிப்பான செய்தியை கர்நாடக மாநில அரசு தற்போது வழங்கியுள்ளது. ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களின் ஊதியத்தை உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மாதம் முதல் போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 12.5\% உயர்த்தப்படுகிறது. இதனால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். அரசின் இந்த அதிரடி உத்தரவு, கே.எஸ்.ஆர்.டி.சி. பி.எம்.டி.சி. என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி மற்றும் கே.கே.ஆர்.டி.சி. ஆகிய நான்கு போக்குவரத்து கழகங்களுக்கும் உடனடியாகப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டாலும், ஊழியர்களின் நலன் கருதி முதல்வர் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


















