
புதுடெல்லி: ஜூலை 2-
தலைநகர் புதுடெல்லியில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாத கும்பலை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு அதிரடியாக முறியடித்துள்ளது.
இந்த அதிரடி ஆபரேஷனில் பஞ்சாபைச் சேர்ந்த 4 சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் பயங்கரவாத ஹேண்ட்லர் ஷஹஜாத் பட்டி மற்றும் அவனது கூட்டாளிகளின் உத்தரவின் பேரில், டெல்லியில் பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட இந்த கும்பல் சதி திட்டம் தீட்டியிருந்ததை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் பஞ்சாபின் தரன் தாரனைச் சேர்ந்த சுப்தீப் சிங் என்கிற விஷால் (23), குர்ஜந்த் சிங் என்கிற ரிஷி (22), அமிர்தசரஸைச் சேர்ந்த சஜன் சிங் என்கிற ஹனி (28) மற்றும் ஃபதேகர் சாஹிப்பைச் சேர்ந்த ககன்பிரீத் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு இவர்களிடம் இருந்து அதிநவீன வெளிநாட்டு தயாரிப்பான ‘ஜிகானா’ பிஸ்டல் மற்றும் ஒரு .30 பிஸ்டல் உட்பட 2 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


















