Home மாவட்டங்கள் பெங்களூர் ஆற்றில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

ஆற்றில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

சிரசி: ஜூலை 13-
உத்தர கன்னடா மாவட்டம் சிரசி தாலுகா உஞ்சள்ளி அருகே உள்ள மாஸ்திஜட்டி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாஸ்திஜட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷா மஞ்சுநாத் நாய்க் (19) மற்றும் ஹொன்னாவர தாலுகா மண்ணிகே கிராமத்தைச் சேர்ந்த மதன் கஜானன நாய்க் (19) ஆகிய இருவருமே உயிரிழந்த மாணவர்கள் ஆவர். கல்லூரி விடுமுறை என்பதால், நேற்று ஹர்ஷா, மதன் மற்றும் இரு சிறுமிகள் என நான்கு பேர் உஞ்சள்ளி அருகே உள்ள மாஸ்திஜட்டி ஆற்றின் தடுப்பணைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
ஹர்ஷாவும் மதனும் ஆற்றில் இறங்கி நீந்திக்கொண்டிருந்த போது, திடீரென நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய இருவரும் சுமார் 15 அடி ஆழமுள்ள பகுதியில் மூழ்கி, நீருக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.
கரையிலிருந்த சிறுமிகள் அலறியடித்துக்கொண்டு உடனடியாக குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் இறங்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ‘ஸ்ரீ மாரிகாம்பா ஆபத்பாந்தவா’ சேவை குழுவின் கோபால கவுடா தலைமையிலான மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இரு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டனர்
சம்பவ இடத்திற்கு பனவாசி காவல் நிலைய பி.எஸ்.ஐ மஹாந்தப்பா கும்பார் மற்றும் விசாரணை அதிகாரி ரவீந்திர பிராதார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பலியானவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக சிரசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து பனவாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.