
பெங்களூரு: ஜூலை 13-
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி) தலைவர் சிவஷங்கப்ப எஸ். சாகுகார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார். மேலும், அவர் மீதான புகார்கள் குறித்து உச்சநீதிமன்ற விசாரணை நடத்தக் கோரி குடியரசுத் தலைவருக்கு கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.
தனது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்காக அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, குடும்பத்தின் ஆண்டு வருமானச் சான்றிதழில் பொய் வருமானத்தைக் குறிப்பிட உதவியதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கே.பி.எஸ்.சி தலைவர் சாகுகாரைத் தற்காலிக நீக்கம் செய்து, தலைவர் பதவிக்கு மூத்த உறுப்பினர் பி. பிரபுதேவை நியமித்து ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவஷங்கரப்பாவுக்கு எதிராக வாரிசு அரசியல், தகவல்களை மறைத்தல் உள்ளிட்ட புகார்கள் வந்துள்ளன. தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, சட்டவிரோதமாகத் தனது இரு மகள்களும் தொழில் விரிவாக்க அதிகாரி பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு அவர் வசதி செய்து கொடுத்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. அவரது நேரடிச் சார்ந்திருப்பவர்கள் கே.பி.எஸ்.சி தேர்வுச் செயல்பாட்டில் பங்கேற்றிருந்தபோது, தலைவர் இந்த நியமனச் செயல்பாட்டிலிருந்து விலகி இருக்கவோ அல்லது நலன்களின் முரண்பாட்டை முறையாக அறிவிக்கவோ தவறியுள்ளது தெளிவாகத் தெரியவந்துள்ளது என்று ஆளுநர் மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுமட்டுமன்றி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் 40 ஆயிரம் ரூபாய் என்று அறிவித்துச் சான்றிதழ் பெற்று, உண்மையான வருமானத்தை மறைத்து ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) இடஒதுக்கீடு மற்றும் வருமான வரம்புப் பலன்களைப் பெற முயன்றதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு உத்தரவின்படி அவரது குழந்தைகளுக்கு ஓ.பி.சி இடஒதுக்கீடு பொருந்தாது என்றபோதிலும், தகவல்களை மறைத்து இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முயன்றதாகக் குற்றச்சாட்டும் பதிவாகியுள்ளது.
வருமானம், சொத்து விவரங்கள் உள்ளிட்ட கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் குற்றச்சாட்டுகளுக்கு முதற்கட்ட ஆதாரங்களை வழங்குவதாகவும், இந்த குற்றச்சாட்டுகள் முறைகேடான நடத்தைக்குச் சமம் என்றும் ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.
பட்சபாதமற்ற விசாரணை நடத்தும் நோக்கத்துடன் கே.பி.எஸ்.சி தலைவர் பதவியிலிருந்து சிவஷங்கரப்பா தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் அடுத்த உத்தரவு வரும் வரை இந்தத் தற்காலிக நீக்கம் அமலில் இருக்கும் என்பதால், இக்காலத்தில் கே.பி.எஸ்.சியின் மூத்த உறுப்பினர் தற்காலிகத் தலைவராகச் செயல்படுவார்.
தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை மற்றும் நியமனச் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையைக் காக்கும் நோக்கில் இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
தற்காலிகத் தலைவராக மூத்த உறுப்பினர் பிரபுதேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
என்ன இந்த சர்ச்சை?
தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் தொழில் விரிவாக்க அதிகாரி பதவிக்கு, சிவஷங்கப்பாவின் மகள் சுமா எஸ். சாகுகார், சாதி/வருமானச் சான்றிதழில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 40 ஆயிரம் ரூபாய் எனக் காண்பித்து, 3பி இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த அசல் ஆவணங்கள் பரிசீலனையின்போது இந்த விஷயம் தேர்வாணைய அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. ஜூன் 19 அன்று நடந்த தேர்வாணையக் கூட்டத்தில் இந்த விஷயம் குறித்த குறிப்பினைச் செயலாளர் கே. ஜோதி தாக்கல் செய்திருந்தார். அன்றைய கூட்டத்திற்குச் செய்திக் குறிப்பை அளித்த சிவஷங்கப்ப எஸ். சாகுகார், மகளின் விஷயம் நிகழ்ச்சி நிரலில் இருப்பதால் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார். இதனால் மூத்த உறுப்பினர் பிரபுதேவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
செயலாளரின் குறிப்பின் அம்சங்கள் குறித்து கூட்டத்தில் நீண்ட விவாதம் நடந்து, தேர்வாணையத்தின் கண்ணியத்தைக் காக்கும் நோக்கத்திலும், இனி பட்சபாதமற்ற விசாரணை நடக்க வேண்டும் என்பதாலும் தலைவர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எந்தவிதத் தடங்கலும் இன்றி சுமுகமாக நியமனச் செயல்பாடுகளை மூத்த உறுப்பினரின் தலைமையில் நடத்த வேண்டும். இந்த விஷயம் தீவிரமானது என்பதால் அரசின் கவனத்திற்குத் கொண்டு செல்வது பொருத்தமானது. எனவே, தேர்வாணையச் செயலாளர் ஒரு விரிவான அறிக்கையை அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வேட்பாளர் சுமா சமர்ப்பித்த 3பி இடஒதுக்கீட்டை நிராகரித்து, வேட்பாளர் மற்றும் பொய் வருமானச் சான்றிதழ் பெற உதவியவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும், வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும், தேர்வாணையத்தால் நடத்தப்படும் எந்தவொரு நியமனத்திலும் பங்கேற்காதவாறு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு தேர்வாணைய உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், செயலாளர்களை அழைத்துத் தகவல் பெற்றுக்கொண்டார். சாகுகாரும் ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கிடையில், தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேர்வாணைய உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சாகுகார் உயர் நீதிமன்றத்தை நாடினார். உயர் நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் இந்த மனுவை விசாரித்து, கே.பி.எஸ்.சி கூட்டத்தின் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும், அன்றைய தேர்வாணையக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்களான பி. பிரபுதேவ், சாந்தா ஹொசமனி, ஹெச்.எஸ். நரேந்திரா, கீதா, சகுந்தலா எஸ். துண்டிகர், ஆர். காவலம்மா, எம்.வி. ராமகிருஷ்ண பிரசாத் சிவனகவுடா, வி. தேவப்பா, ஹெச்.எஸ். போஜநாயக் மற்றும் தேர்வாணையச் செயலாளருக்கு அறிவிக்கை அனுப்பி, நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 11-க்கு ஒத்திவைத்தது.
கே.பி.எஸ்.சி கூட்டத்தின் தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தவுடனேயே, தொழில் விரிவாக்க அதிகாரி பதவிக்கான வேட்பாளர் சுமா எஸ். சாகுகார் பொய் வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ் சமர்ப்பித்துள்ளார் என்று கே.பி.எஸ்.சி செயலாளர் கே. ஜோதி விதான் சவுதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்தனர்.
தற்போது ஆளுநர் கே.பி.எஸ்.சி தலைவரைத் தற்காலிக நீக்கம் செய்து, உச்சநீதிமன்ற விசாரணைக்கு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.


















