Home மாவட்டங்கள் பெங்களூர் திருமணமான 4 மாதங்களில் புது பெண் தற்கொலை – உருக்கமான கடிதம்

திருமணமான 4 மாதங்களில் புது பெண் தற்கொலை – உருக்கமான கடிதம்

பெங்களூரு, ஜூலை 13-
கணவர் மற்றும் நாத்தனாரின் வரதட்சணை கொடுமை தாளாமல், திருமணமான நான்கே மாதங்களில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் பெங்களூரு காமாக்ஷிபால்யா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சிக்கமகளூரு மாவட்டம் தரீகெரேவைச் சேர்ந்தவர் ஸ்வேதா (வயது 25). இவரும் குணிகல் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் கமலா நகரிலுள்ள சக்தி கணபதி கோவிலில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில் கணவர் குடும்பத்தாருடன் வசித்து வந்த ஸ்வேதா, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
திருமணமான சில நாட்களிலிருந்தே கணவர் மூர்த்தியும், அவரது அக்காவும் (நாத்தனார்) சேர்ந்து ஸ்வேதாவிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர். “உன் அக்காக்களின் திருமணத்தை உங்கள் அம்மா பிரம்மாண்டமாக நடத்தினாரே, அதேபோல் உனக்கும் பணம், நகைகளை வாங்கித் தரச் சொல்” என்று கூறி மூர்த்தி தினமும் ஸ்வேதாவை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது
கணவரின் கொடுமை தாங்காமல் ஸ்வேதா தனது தாய் புஷ்பாவிற்கு போன் செய்து, “அம்மா, என்னால் இங்கு வாழவே முடியவில்லை” என்று கதறி அழுதுள்ளார். அதற்கு அவரது தாய், “மகளே, அங்கு உனக்குத் தொல்லை இருந்தால், உடனே வீட்டை விட்டு வெளியேறி ஏதாவது ஒரு விடுதியில் (PG) தங்கிவிடு” என்று தைரியம் கூறி தேற்றியுள்ளார்.
ஆனாலும், கணவர் குடும்பத்தாரின் தொடர் மன உளைச்சலால் விரக்தியடைந்த ஸ்வேதா, நேற்று இரவு 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு ஸ்வேதா எழுதிய உருக்கமான மரண வாக்குமூலக் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தன் தாயை நோக்கி அவர் எழுதியிருப்பதாவது:
என் சாவுக்கு என் கணவரும், அவரது அக்காவும்தான் காரணம். அவர்கள் என்னை வாழப் பிடிக்காதபடி சித்திரவதை செய்துவிட்டார்கள். இனி எனக்கு வாழவே அம்மா. என் சாவுக்கு காரணமான அவர்களை மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் சும்மா விட்டுவிடாதே. அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் கொடு. என்னை மன்னித்து விடு அம்மா… இப்படிக்கு உன் அன்பு மகள் ஸ்வேதா.” எனக் கண்ணீருடன் எழுதியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காமாக்ஷிபால்யா போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஸ்வேதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்குத் தூண்டிய கணவர் மூர்த்தி மற்றும் அவரது அக்காவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.