
அகமதாபாத்: ஏப்ரல் 23-
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் சபர்மதி ஆற்றங்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குக்காக கூடுவர். இங்கு மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது வழக்கம். சில பயணிகள் வேண்டுதலுக்காக ஆற்றில் காசுகள், தங்கம், வெள்ளி நகைகளை போடுவதும் வழக்கம்.
சிலர் குளிக்கும்போது தங்க, வெள்ளி ஆபரணங்களை இழப்பதும் உண்டு. சபர்மதி ஆற்றில் உள்ள வஸ்னா தடுப்பணையின் கதவுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தடுப்பணை மூடப்பட்டது. இதனால் சபர்மதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வறண்டு காணப்படுகிறது.இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சபர்மதி ஆற்றங்கரையில் குவிந்து ‘புதையலை’ தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருவருக்கு வெள்ளி நாணயம் கிடைத்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலும், துருப்பிடித்த இரும்பு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள்தான் அங்கு கிடைக்கின்றன. ஆனாலும் பலர் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் தேடி வருகின்றனர்.


















