
ஹைதராபாத், ஏப்ரல் 18- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்த நிலையில் அந்த அணி கடைசியாக தனது சொந்த மைதானத்தில் கம்பீரமாக மீண்டு வந்தது. அந்த ஆட்டத்தில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இருந்தனர்.
இவர்கள் இருவரின் வருகை அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் அணியும் சமநிலையை அடைந்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களான ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோருக்குப் பதிலாகக் களமிறக்கப்பட்ட பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் ஆட்டம் தொடங்கியதுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர்.முதல் மூன்று ஓவர்களுக்குள்ளேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலைக்குச் சரியச் செய்து நடப்பு சீசனில் அந்த அணியின் முதல் தோல்விக்குக் காரணமாக அமைந்தனர்.
விதர்பாவைச் சேர்ந்த 24 வயதான பிரஃபுல் ஹிங்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்வரிசை வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரல், லுவான்-டிரே பிரிட்டோரியஸ், கேப்டன் ரியான் பராக் ஆகியோரைத் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே வீழ்த்தி அந்த அணியை நிலைகுலையச் செய்தார். அவர் தனது 4 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.





















