Home தலைப்பு செய்தி பிஜேபி கூட்டணிக்கு கருப்பு தினம்

பிஜேபி கூட்டணிக்கு கருப்பு தினம்

புதுடெல்லி: ஏப்ரல் 18-
நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வர்ணித்துள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, இந்த மசோதா தோல்வி அடைந்ததை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்த முதல் பெரும் பின்னடைவாகவும், ஒரு “கருப்பு தினமாகவும்” குறிப்பிட்டார்.
நேற்று நடந்த நிகழ்வுகள் குறித்து அவர் பேசுகையில், “நேற்று நடந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இது கூட்டாட்சி தத்துவத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளுக்கு கிடைத்த தோல்வி. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எவ்வளவு வலிமையானது என்பதை இந்த முடிவு உலகுக்கு உணர்த்தியுள்ளது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஆளும் தரப்பு தீட்டிய ‘சதித்திட்டத்திற்கு’ விழுந்த பலத்த அடி இது,” என்று அவர் சாடினார்.
மகளிர் இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது துளியும் மதிப்பற்ற இந்த அரசு, பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற போர்வையில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இவ்வளவு பெரிய அளவில் மாற்றியமைப்பதை எதிர்க்கட்சிகள் எப்படி அனுமதிக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த முடிவின் தாக்கம் ஆளும் தரப்பினரின் முகங்களிலேயே அப்பட்டமாகத் தெரிந்தது என்று குறிப்பிட்ட அவர், இது இந்திய அரசியலமைப்பிற்கும், எதிர்க்கட்சிகளின் ஒருமைப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட பழைய மகளிர் நல மசோதாவை அவர்கள் கொண்டுவரட்டும். யார் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பது அப்போது தெரியும்” என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, “அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட முந்தைய மகளிர் நல மசோதாவை அவர்கள் கொண்டுவரட்டும். இதற்காக வரும் திங்கள் கிழமையே நாடாளுமன்றத்தைக் கூட்டி, மசோதாவை கொண்டுவரட்டும். யார் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பது அப்போது தெரியும். நாங்கள் அனைவரும் உங்களுக்கு(அரசுக்கு) ஆதரவாக வாக்களிப்போம்” என குறிப்பிட்டார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாதது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. 33% இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறோம். 2023ம் ஆண்டின் திருத்த மசோதாவை நாங்கள் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றினோம். இருப்பினும் தற்போது அதில் தொகுதி மறுவரையறை தொடர்பான ஒரு பிரிவைச் சேர்த்தனர். இதன்மூலம், மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்துவிட்டனர். இந்த மூன்று மசோதாக்களையும் ஒன்றாகக் கொண்டு வந்ததன் மூலம் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினர்.
இதன் மூலம், எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் எந்தவொரு தொகுதி மறுவரையறைச் சட்டத்தையும் அவையில் எளிய பெரும்பான்மையின் மூலமே நிறைவேற்றவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும் என்ற நிலையை உருவாக்க முயன்றனர்.
மகளிர் இட ஒதுக்கீட்டை தற்போதுள்ள 543 உறுப்பினர்களுக்குள்ளேயே செய்திருக்க வேண்டும். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லது சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு அடுத்த தேர்தலின்போது நீங்கள் இதை முழுமையாகச் செயல்படுத்தி இருக்கலாம். அரசியலமைப்பின் கட்டமைப்பையே மாற்றி அமைத்து நிர்வாக அதிகாரத்தை தங்கள் கைகளுக்குள் எடுத்துக்கொள்வதே அவர்களின் உண்மையான நோக்கமாக உள்ளது” என விமர்சித்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாதது வேதனை அளிப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுதா மூர்த்தி, “நான் வருத்தப்படுகிறேன். கெள்கை வகுப்பதில் பெண்கள் ஒரு அங்கமாக ஆவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஒருநாள் அது நடக்கும் என நம்புகிறேன். எந்தவொரு சமூக மாற்றத்துக்கும் காலம் தேவை” என கூறினார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் கடைசி நாளான இன்று இரு அவைகளும் கூடின. பின்பு, தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.