Home மாவட்டங்கள் பெங்களூர் ஒரேநாளில் கோவை வரும் மோடி, ஸ்டாலின் – போக்குவரத்து மாற்றம்

ஒரேநாளில் கோவை வரும் மோடி, ஸ்டாலின் – போக்குவரத்து மாற்றம்

கோவை: ஏப்ரல்18-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். கோவை மாநகருக்கு இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வருகை தரவுள்ளனர். இதனால், மாநகரில் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று (18.04.2026) வருகை புரிவதால் மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம். நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பில் U-Turm செய்து புலியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக L&T பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோலப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் இலகுரக வாகனங்கள் அவினாசி ரோடு டைட்டல் பார்க் சந்திப்பில் U-Turn செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். விமான நிலையத்தில் தடை 18.04.2026 தேதியன்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் வருகையையொட்டி மாலை 16.00 மணி முதல் இரவு 20.00 மணி வரை விமான நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விடவும். ஏற்றிச் செல்லவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் விமான நிலைய நுழைவாயில் வரை வர தடை செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் விமான நிலையத்திற்கு வருபவர்கள் மாலை 16.00 மணிக்கு முன்பாக விமான நிலையம் வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாலை 16.00 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அதேபோல, இன்று கால் டாக்ஸிகள் மற்றும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்திற்குள் Parking செய்ய அனுமதியில்லை. எனவே, மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுத்து, தங்களது பயண திட்டம் மற்றும் பயண பாதையை வகுத்து விரைவான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.