Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூருக்கு நடுநிசியில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்க சிறுத்தைகள்

பெங்களூருக்கு நடுநிசியில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்க சிறுத்தைகள்

பெங்களூரு:ஏப்ரல்18-
தென்னாப்பிரிக்காவிலிருந்து பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்காக கொண்டுவரப்பட்ட நான்கு சிறுத்தைகளை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் பி. காண்ட்ரே நேற்று நள்ளிரவு நேரில் சென்று வரவேற்றார்.
கல்புர்கியில் தனது நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, ஹைதராபாத் வழியாக நள்ளிரவில் பெங்களூரு வந்தடைந்த அமைச்சர், ஓய்வெடுக்கச் செல்லாமல் நேரடியாக சர்வதேச விமான நிலையத்தின் ‘கார்கோ’ முனையத்திற்கு விரைந்தார். அங்கு பன்னர்கட்டா பூங்காவிற்குப் புதிய வரவாக வந்துள்ள நான்கு சிறுத்தைகளையும் அவர் முறைப்படி வரவேற்றார்.
புதிய சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்தச் சிறுத்தைகளுக்கு எவ்வித உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதில் அமைச்சர் உறுதியாக இருந்தார். இது குறித்து அவர் அதிகாரிகளிடம் பேசுகையில்: சிறுத்தைகளை உடனடியாக 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பில் வைக்க வேண்டும்.அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட உணவுகளை வழங்கி, ஏதேனும் தொற்று பாதிப்புகள் உள்ளதா எனப் பரிசோதிக்க வேண்டும். அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி, பத்திரமாகப் பன்னர்கட்டா பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் கால்நடை மருத்துவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
முன்பு ஒரு காலத்தில் கர்நாடகக் காடுகளில் ‘சிவிங்கி’ என்று அழைக்கப்படும் சிறுத்தைகள் அதிகளவில் காணப்பட்டன. ஆனால் இப்போது அவை நம் மாநிலக் காடுகளில் இருந்து முற்றிலும் அழிந்துவிட்டன. எனவே, பொதுமக்கள் அவற்றை உயிரியல் பூங்காக்களிலாவது கண்டு ரசிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதில் அந்த விலங்குகளின் பாதுகாப்பிற்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என்று கர்நாடக உயிரியல் பூங்கா ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சுனில் பன்வாரிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.