
குவாஹாட்டி, ஜூன் 16- எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடிப்பதால் இந்திய, வங்கதேச எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் 9 பேர் தவித்து வருகின்றனர். அசாமின் தெற்கு சல்மாரா-மன்கச்சார் மாவட்ட எல்லையில் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 9 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எப்) தடுத்து நிறுத்தி உள்ளனர். அவர்களை தங்கள் நாட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், அவர்களை அனுமதிக்க வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) மறுப்பு தெரிவித்து வருகிறது. அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை என பிஜிபி கூறுகிறது. குடியுரிமை இன்னும் உறுதிப்படுத்தப்படாததால், அந்த 9 பேரால் இரு நாடுகளுக்குள்ளும் நுழைய முடியவில்லை. இவர்கள் இரு நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தவித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் (பிஎஸ்எப்) வங்கதேச எல்லைக் காவல் படைக்கும் இடையே ஒரு கொடி அமர்வு கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று இந்த 9 பேரும் எல்லையின் இடைப்பட்ட பகுதியில் தவிப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, மன்கச்சார் பகுதியில் உள்ள இந்திய-வங்கதேச எல்லையில் பதற்றம் தொற்றிக்கொண்டது. சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், அவர்களில் ஒருவர் தாங்கள் வங்கதேச குடிமக்கள் என்றும், வேலைக்காக இந்தியாவுக்கு வந்ததாகவும் ஒப்புக்கொள்வது கேட்கிறது. எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் அவர்கள் அழுவதைக் காட்டும் மேலும் பல வீடியோக்களும் வெளியாகியுள்ளன.


















