Home செய்திகள் உலக செய்திகள் மோடிக்கு டிரம்ப் புகழாரம்

மோடிக்கு டிரம்ப் புகழாரம்

ஏவியான் (பிரான்ஸ்): ஜூன் 20-
உலக அளவில் தனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களின் பெயர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். ஜி-7 உச்சி மாநாடு நிறைவடைந்த பிறகு அளித்த சிறப்பு நேர்காணலில், அதிகாரம், செல்வாக்கு மற்றும் முடிவுகளைச் செயல்படுத்தும் திறனின் அடிப்படையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் என்று அவர் வர்ணித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மற்றும் ராஜதந்திர சாதுரியத்தை டிரம்ப் மனம்திறந்து பாராட்டினார். பிரதமர் மோடியைப் பார்க்க மிகவும் அமைதியானவர் போலவும், மென்மையான குணம் கொண்டவர் (தேவதூதர் போல) போலவும் காட்சியளிக்கிறார். ஆனால், உண்மையில் அவர் நாட்டின் நலனைக் காப்பதில் மிகவும் கடுமையான முடிவுகளை எடுக்கும் ஒரு ‘அதிரடி மனிதர்’ என்று டிரம்ப் வர்ணித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “நான் பல ஆண்டுகளாக இந்திய அரசியலைக் கவனித்து வருகிறேன். அங்கு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அல்லது ஒரு வருடத்திற்கும் பிரதமர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், மோடி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பலத்த ஆட்சியில் இருக்கிறார். அவரிடம் ஒரு அற்புதமான அமைதி இருக்கிறது. அதற்காக அவர் சாதுவான மனிதர் அல்ல, மிகவும் துணிச்சலான தலைவர்” என்றார்.
இந்தியா 150 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாடு. இவ்வளவு பெரிய நாடாக இருந்தபோதிலும், மோடி தேவையில்லாத போர்களில் இருந்து இந்தியாவைத் தூரவே வைத்துள்ளார், இது அவருடைய புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது என்று டிரம்ப்
முன்பெல்லாம் இந்தியா அமெரிக்காவுடன் ஒருதலைப்பட்சமாக வர்த்தகம் செய்து வந்தது ஆனால், இப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமமான மற்றும் நியாயமான வர்த்தகம் நடக்கிறது. இந்த புதிய மாற்றத்தால் இந்தியாவுக்கு அந்தளவுக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும், மோடி ஒரு சிறந்த தலைவர் என்று டிரம்ப் கூறினார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கடுமையான உழைப்பைப் பாராட்டிய டிரம்ப், அவர் எப்போதும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தும் மனிதர் என்றார். “ஒருவேளை நீங்கள் ஷி ஜின்பிங் அல்லது நரேந்திர மோடி பற்றிய திரைப்படம் எடுக்க நினைத்தால், அந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான ஒருவரைக் கூட உங்களால் ஹாலிவுட்டில் கண்டுபிடிக்க முடியாது. ஷி ஜின்பிங் 6 அடி 2 அங்குல உயரத்துடன், கம்பீரமான தோற்றமும் தன்னம்பிக்கையும் கொண்டவர். மோடியின் பாணியே வேறு, அவருக்கு உலக அளவில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது” என்று டிரம்ப் நாசூக்காகக் குறிப்பிட்டார்.
ஜி-7 உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வரி விதிப்பு விவாதம், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது மற்றும் ஈரான் மோதலின் போது ஓமன் வளைகுடாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது ஆகிய காரணங்களால் இரு நாட்டு உறவிலும் லேசான விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்தக் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளிப் பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் நமக்கும் இடையே முறையான பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் இல்லையென்றாலும், இந்தியாவின் மீது எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும் அமெரிக்கா ஆதரவாக நிற்கும். இந்தியாவில் மோடி தலைவராக இருக்கும் வரை, வெள்ளை மாளிகையில் அவருக்கு ஒரு சிறந்த நண்பன் இருக்கிறார்” என்று பலத்த உறுதியளித்தார்.
ஈரானுடனான சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, தனது அதிகாரத்திற்கு எந்த எல்லையும் இல்லை (நோ லிமிட்ஸ்) என்று டிரம்ப் வாதிட்டார்.
“இஸ்ரேல் நாட்டிற்கு என் மீது அளவற்ற மரியாதை இருக்கிறது, நான் சொல்வதை அவர்கள் கேட்பார்கள். நான் இல்லையென்றால் இன்று இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது” என்றும் டிரம்ப் கூறிக்கொண்டார். ஜி-7 அமைப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்லாததற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். ரஷ்யா இந்த அமைப்பில் இருந்திருந்தால் உக்ரைன் போரே நடந்திருக்காது என்றார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனக்காக வெர்சாய்ஸ் அரண்மனையில் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட அரச விருந்தை நினைவு கூர்ந்த டிரம்ப், “இதுபோன்ற பிரம்மாண்டமான ராஜபோக ஏற்பாடுகள்தான் என் பலவீனம்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
குறிப்பாக, இந்திய மற்றும் சீனத் தலைவர்களைப் பாராட்டிய பிறகு, தனக்குப்பிடித்த தலைவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் பெயர்களையும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.