Home விளையாட்டு இந்திய டி20 தொடருக்கு சிக்கல்

இந்திய டி20 தொடருக்கு சிக்கல்

பெல்ஃபாஸ்ட், ஜூன் 12- 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகவுள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடர், அங்கு நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் அண்மையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பயங்கர வன்முறை வெடித்துள்ளது. பல வீடுகள் மற்றும் கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பாதுகாப்பு கருதி அங்கு பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதங்கள் காரணமாக, ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் நடைபெறவிருந்த 2 போட்டிகள் கொண்ட இந்தியா – அயர்லாந்து டி20 தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அங்கு நடைபெறவிருந்த உள்ளூர் டி20 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பெல்ஃபாஸ்டில் நிலவும் அசாதாரண சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பே எங்களுக்கு மிகவும் முக்கியம். பாதுகாப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 776 ரன்கள் குவித்து அசத்திய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இத்தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமாக உள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, மிகக் குறைந்த வயதில் இந்தியாவிற்காக விளையாடிய ஆண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். மேலும், சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான முதல் தொடரும் இதுவாகும். இதனால் இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.