
புதுடெல்லி: ஜூன் 13-
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) உள்நாட்டிலேயே தயாரித்த ‘அயன் டோம்’ பாதுகாப்பு அமைப்பின் கீழ், நேற்று மற்றும் முன்தினம் எனத் தொடர்ந்து மூன்று ஏவுகணைகளின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் வான்வழிப் பாதுகாப்பு மற்றும் கடற்படை எதிர்ப்புப் போரில் தங்களின் அதிநவீன மற்றும் மேம்பட்ட திறனை நிரூபித்துக் காட்டியுள்ளன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின், நடுத்தர தூர ஏவுகணைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிநவீன இடைமறிப்பு (பிரதிபந்தக) ஏவுகணைகள் ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டன. இது இந்திய ராணுவத்திற்கு மிகப் பிரபல்யமான மற்றும் பலம் வாய்ந்த ஆயுதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடைமறிப்பு ஏவுகணைகள், எதிரி நாடுகள் வளிமண்டலத்தின் உள்ளேயோ அல்லது விண்வெளியின் வெளிப்புறப் பகுதியிலோ 2,000 கிலோமீட்டர் முதல் 5,000 கிலோமீட்டர் தூரத்திற்குள் ஏவும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, உடனே அவற்றை நடுவானிலேயே செயலிழக்கச் செய்யும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கடற்படைக் கப்பல்களிலிருந்து ஏவப்பட்டு எதிரிக் கப்பல்களை அழிக்கும் நடுத்தர தூர ஏவுகணையின் முதல் சோதனை ஓட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தியது. கடற்படை தளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையானது துல்லியமான வழிசெலுத்தல் கடற்பரப்பிற்கு மிக நெருக்கமாகத் தாழ்வான உயரத்தில் பறக்கும் திறன் மற்றும் கடல் இலக்குகளுக்கு எதிரான இறுதிநேரத் துல்லியம் ஆகியவற்றைச் சிறப்பாகப் பிரதிபலித்துள்ளது. இது இந்திய ராணுவத்திற்கு மிகப்பெரிய சக்தியாக அமையும் என பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட தூர அச்சுறுத்தல்களை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட இந்த பல அடுக்கு ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பின் வெற்றிகரமான சரிபார்ப்பு, இந்திய பாதுகாப்புப் படைகளுக்குக் கிடைத்துள்ள மற்றொரு மிக முக்கிய ஆயுதமாகும்.
எதிரி நாட்டு ஏவுகணைகளைக் கண்டறியும் ரேடார்கள், கட்டளை மையங்கள் மற்றும் அவற்றை நாசம் செய்ய வடிவமைக்கப்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகளின் மேம்பட்ட நெட்வொர்க் இதுவாகும். வளிமண்டலத்திற்குள்ளோ அல்லது விண்வெளியிலோ அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் பாதுகாப்பு வழங்கும் இவை, நவீன தேசிய பாதுகாப்பின் மிக முக்கியமான அங்கங்களாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் நேட்டோ கூட்டமைப்பு போன்ற உலகின் ஒரு சில நாடுகள் மட்டுமே பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை முதன்மையாகப் பயன்படுத்தி வருகின்றன என்ற தகவலும் அளிக்கப்பட்டுள்ளது.


















