
பெங்களூரு: ஜூன் 13-
பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்று, சாலையின் நடுவே இருந்த டிவைடரில் (தடுப்புச்சுவர்) பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார்.ஹோஸ்கோட்டே அடுத்த தொட்ட ஹுல்லூரு அருகே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், மோதிய வேகத்தில் அந்த பென்ஸ் கார் அடியோடு நொறுங்கி உருக்குலைந்தது. காரை ஓட்டி வந்த டிரைவரின் அஜாக்கிரதையான மற்றும் பொறுப்பற்ற ஓட்டுதலே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து நடந்தவுடனே காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனால் இந்த விபத்தில் ஏதேனும் மர்மம் இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. விபத்துக்கான அசல் காரணம் என்ன என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல் தெரியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த ஹோஸ்கோட்டே போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள கார் டிரைவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



















