Home மாவட்டங்கள் பெங்களூர் இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: ஜூன் 10-
திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ”தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும் துயரமும் அடைந்தேன்.
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கு என தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் பாரதி ராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.முன்னதாக, நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதி ராஜாவின் உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலை காலாமானார்.