Home மாவட்டங்கள் பெங்களூர் சுத்தம் செய்யாத காலியிட உரிமையாளர்களுக்கு அபராதம்

சுத்தம் செய்யாத காலியிட உரிமையாளர்களுக்கு அபராதம்

பெங்களூரு: ஆக. 27:
பெங்களூரில் ‘குப்பையில் இருந்து சுதந்திரம்’ என்ற சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், நகரில் உள்ள காலியிடங்களைச் சுத்தமாகப் பராமரிக்க நில உரிமையாளர்களுக்குக் கெடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, காலியிடங்களைச் சுத்தம் செய்யாத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை அரசு இன்று தொடங்கியது.
சாந்தி நகர் தொகுதிக்குட்பட்ட தொம்ளூர் லே-அவுட் சர்வீஸ் சாலையில் (யமஹா ஷோரூம் அருகில்) இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரேட்டர் பெங்களூரு வளர்ச்சித்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கலந்து கொண்டு இந்த அபராதம் விதிக்கும் பணியை முறைப்படி தொடங்கி வைத்தார்.
சொந்தக் காலியிடங்களைச் சுத்தப்படுத்தாத பட்சத்தில், கிரேட்டர் பெங்களூரு ஆணையமே நேரடியாக இறங்கி அந்த இடங்களைச் சுத்தம் செய்யும். அதற்கு ஆகும் முழுச் செலவும் அபராதமாக நில உரிமையாளர்களின் சொத்து வரியுடன் நேரடியாகக் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பி.டி.ஏ. தலைவரும் சாந்தி நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான என்.ஏ.ஹாரிஸ், ஜி.பி.ஏ. முதன்மை ஆணையர் மகேஸ்வர் ராவ், மத்திய மாநகராட்சி ஆணையர் ஜெகதீஷ் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.