
பெங்களூரு: ஆக. 27:
பெங்களூரு பஸவனகுடி பகுதியில் ஈத் மிலாத் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பஸவனகுடி காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 8 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அப்துல் ரசாக் அளித்த புகாரின் பேரில், புனீத் கெரேஹள்ளி ஆதரவாளர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமாரசாமி லேஅவுட், கோணனகுண்டே, எரப் நகர் மற்றும் பனசங்கரி ஆகிய பகுதிகளில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் என்.ஆர். ரோடு வழியாக ஒய்.எம்.சி.ஏ. நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த மோதல் வெடித்தது. மாலை 3:45 முதல் 4:00 மணி அளவில் சிலர் சாலையை மறிப்பதாக 112 அவசர எண்ணிற்கு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவித்தல் மற்றும் இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் புனீத் கெரேஹள்ளி, கோபி கவுடா, புனீத் கவுடா, வினோத் நாயக் மற்றும் பலர் மீது முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கமல் பாஷா, அபூபக்கர் சித்தீக், சையத் அனாஸ் ஆகியோர் மீது இரண்டாம் வழக்கு பாயந்துள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 3 சிறுவர்கள் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ளனர். பொதுச் சாலையை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகச் சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் மீது மூன்றாம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்தில் கே.எஸ்.ஆர்.பி. அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, தீவிர ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் உயர் அதிகாரிகள், இரு தரப்பு புகார்களையும் பெற்று மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.













