
கலபுரகி, ஆக. 27:
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கிய கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சின்ச்சோளி தாலுகாவைச் சேர்ந்த மல்லிநாத் கொலகுந்தி, சங்கமேஷ் கனகபுரா ஆகிய 2 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 பேருடன் சேர்ந்து மொத்தம் 25 பேராக நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கர்நாடகாவைச் சேர்ந்த இருவரும் சிக்குண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரிடர் மேலாண்மை முகமை அதிகாரிகள் உடனடியாக அவர்களைத் தொடர்புகொண்டு பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து, வெள்ளத்தில் சிக்கிய 2 பேரையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். நேபாளத்தில் மீட்கப்பட்ட இருவரையும் டெல்லிக்கு அழைத்து வர கர்நாடக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.













