
வாஷிங்டன், ஆக. 3- ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை, மத்தியஸ்தர்கள் முன்னிலையில் இன்று நள்ளிரவு மீண்டும் துவங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வந்தது. குறிப்பாக, கடந்த வாரம் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்தார். ஆனால், மேற்காசிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான புதிய ராணுவ தாக்குதல்களை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், அமைதி ஒப்பந்த வரைவு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியஸ்தர்கள் முன்னிலையில் ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை இன்று மீண்டும் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது; ஈரானுடனான பேச்சுவார்த்தை இன்று நள்ளிரவு துவங்குகிறது. இந்தப் பேச்சுவார்த்தை எப்படி செல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒப்பந்தம் செய்வதை நான் விரும்புகிறேன். நாங்கள் தயாராக இருக்கிறோம். மனிதர்களைக் கொல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில் இதில் ஏராளமானோர் உயிரிழப்பார்கள். அதை நாங்கள் விரும்பவில்லை.சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நட்பு நாடுகளின் வேண்டுகோளின் பேரிலேயே தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயாராகவே இருந்தோம். ஒப்பந்தம் சாத்தியமாகும் என்பதால் தான் நட்பு நாடுகள் இந்தப் போர் நிறுத்தத்தை கேட்டுக் கொண்டன. முதலில் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஒரு ஒப்பந்தம் எட்டப்படும். அதன்பிறகு, ஈரானின் அணுஆயுத ஒழிப்பு குறித்த ஒப்பந்தமும் உருவாகும், இவ்வாறு அவர் கூறினார்.














