
புதுடெல்லி: ஜூன் 6-
சேவைத் துறை வளர்ச்சியால், 2026-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதாரம் 2026-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சந்தை எதிர்பார்ப்புகளை தாண்டியுள்ளது. நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 7.8 சதவீதம் வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சேவைத்துறையின் வளர்ச்சியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், முழு ஆண்டுக்கான வளர்ச்சி 7.7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2026-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் ஜிடிபி ரூ. 87.77 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.81.40 லட்சம் கோடியாக இருந்தது. இந்த காலாண்டிற்கான உத்தேச ஜிடிபி ரூ. 94.65 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டு, 9.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முழு நிதியாண்டான 2025-26-ல், உண்மையான ஜிடிபி ரூ.323.12 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 நிதியாண்டின் முதலாவது திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ. 299.89 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 7.7 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது. உத்தேச ஜிடிபி முந்தைய ஆண்டை விட 8.9 சதவீதம் அதிகரித்து ரூ. 346.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சி புள்ளி விவரங்களைக் குறிப்பிட்டு, “பொருளாதார சுனாமி” ஏற்படும் என்று எதிர்மறையாக எச்சரிக்கை விடுத்திருந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


















