
புதுடெல்லி, ஆக. 8- ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் கடந்த 28 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த நடுவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் இடம் பெறவில்லை. இதனால் முன்னாள் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் வரும் 15-ம் தேதி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியாவிலிருந்து ஒரு நடுவரோ அல்லது தொழில்நுட்ப அதிகாரியோ இடம்பெறவில்லை. 1998-ம் ஆண்டு உட்ரெக்ட் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அதிகாரிகளின் பங்களிப்பு இல்லாமல் உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே நடுவர் குழுவில் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா சார்பில் அமர்ஜித் சிங் பாவா (1990), தர்லோக் சிங் புல்லர் (1994), சதீந்தர் ஷர்மா (2002, 2006, 2010), ஆர்.வி. ரகு பிரசாத் (2010, 2014, 2018, 2023) ஆகிய 4 பேர் நடுவர்களாகப் பணியாற்றியுள்ளனர். இதில் ரகு பிரசாத் 200 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றிய முதல் ஆசிய நடுவர் என்ற பெருமையை பெற்றார். அவர், கடந்து ஆண்டு ஓய்வு பெற்றிருந்தார். ரகு பிரசாத் கூறும்போது “முந்தைய உலகக் கோப்பை, ஒலிம்பிக், புரோ லீக் மற்றும் பிற சர்வதேசப் போட்டிகளில் வெளிப்படுத்தப்படும் திறமையை மதிப்பீடு செய்தே எஃப்.ஐ.எச் நடுவர் குழு பெரிய போட்டிகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கிறது. நிலையான திறமையே பிரதான அளவுகோலாக இருக்கும்” என்றார். பல ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பைகளில் பணியாற்றிய சதீந்தர் ஷர்மா கூறும்போது, “பாவா, புல்லர் ஆகியோருக்கு பிறகு, நானும் ரகுவும் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்தோம். ஐரோப்பிய அதிகாரிகளுக்கு மத்தியில் எங்களை நிலைநிறுத்துவது எளிதாக இருந்ததில்லை. 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெறவில்லை என்றாலும், நான் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதியாக அங்கு அதிகாரியாகப் பங்கேற்றேன்.
















