
சென்னை, ஆக. 8- ஹாக்கி திருவள்ளூர் சார்பில் ‘தமிழ் ஹாக்கி லீக் 2026’ தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (9-ம் தேதி) தொடங்குகிறது. இந்தத் தொடரில் 12 ஆடவர் அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடர் வரும் செப்டம் 12 வரை 35 நாட்கள் நடைபெறுகிறது. முதன்முறையாக 4 அணிகள் பங்கேற்கும் மகளிர் மினி லீக்கும் நடத்தப்பட உள்ளது. ஆடவர் பிரிவில் கலந்து கொள்ளும் 12 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியன் வங்கி, வருமான வரித்துறை, தெற்கு ரயில்வே, எஸ்.எம். நகர், ஜி.எஸ்.டி & மத்திய கலால் துறை, விளையாட்டு விடுதி சிறப்பு மையம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஏ.ஜி.ஓ.ஆர்.சி. தியான் வீரன்ஸ், பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், இந்திய உணவுக் கழகம், ஐசிஎஃப் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 30 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் தலா 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் இருந்து 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். பிளேஆஃப் சுற்றில் குவாலிஃபையர் 1, குவாலிஃபையர் 2 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெறும். இதன் முடிவில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போடடியில் பலப்பரீட்சை நடத்தும். எலிமினேட்டர் போட்டியும், இறுதிப் போட்டியும் மின்னொளியில் நடைபெற உள்ளன. இந்த போட்டி தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் கோப்பை அறிமுகம் நேற்று மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன், லீக்கின் தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை, தொழில்நுட்ப அதிகாரி மொகுல் முகமது முனீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















