
சென்னை: மே 6-
தமிழக அரசியலில் ஒரு பக்கம் கூட்டணிக் கணக்குகள் அனல் பறக்க, இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கூடத்தில் அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்பு வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன. பனையூர் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அனைத்தும் ‘பகீர்’ ரகம்.
விஜய்யின் கையில் ‘சாவி’ ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகள் ஒருபுறம் நடந்தாலும், முதல்வர் நாற்காலியில் அமரப்போகும் விஜய், மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக முதல்வர் வசம் உள்துறை இருப்பது வழக்கம். ஆனால், விஜய் ஒரு படி மேலே போய், நிதியமைச்சகத்தையும் (Finance Department) தன் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறாராம். மாநிலத்தின் வரவு – செலவு கணக்குகளில் எந்தவிதமான கறையும் படிந்துவிடக்கூடாது என்பதில் ‘விஜய்’ கறாராக இருப்பதாகத் தெரிகிறது.
ரேஸில் முந்தும் விஐபிக்கள்! அமைச்சரவை ரேஸில் பல பெயர்கள் அடிபட்டாலும், சில இடங்கள் இப்போதே ‘ரிசர்வ்’ செய்யப்பட்டுவிட்டன என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். சபாநாயகர் நாற்காலி: அனுபவம் வாய்ந்த ஜெ.சி.டி. பிரபாகரன் தான் சட்டப்பேரவை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாம். அவரின் அனுபவம் சபையை வழிநடத்த உதவும் எனக் கணக்கு போடப்படுகிறது. ஆனந்தின் ஆசை: விஜய்யின் நிழலாக வலம் வரும் புஸ்ஸி ஆனந்த், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையை (Municipal Administration & Rural Local Bodies) குறிவைத்துக் காய் நகர்த்தி வருகிறார். ஆதவ் அர்ஜுனின் கோரிக்கை: கட்சியின் முக்கிய முகமாகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுன், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறையைக் கேட்டிருப்பதாகத் தகவல். இங்குதான் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் இருந்து மூன்று முக்கியப் புள்ளிகளுக்கு அமைச்சர் பதவி உறுதியாகிவிட்ட நிலையில், ஆர்.கே. நகரில் வெற்றி வாகை சூடிய மரியா வில்சனுக்கு மந்திரி சபையில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. “ஒரே மாவட்டத்தில் பலருக்குப் பதவி கொடுத்தால் மற்ற மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைவார்கள்” என்பதுதான் தலைமை முன் வைக்கும் வாதம். இதனால் மரியா வில்சன் தரப்பு கடும் அப்செட்டில் உள்ளதாம்.
ஒரே துறைக்கு இரண்டு போட்டி! அமைச்சரவைப் பட்டியல் இன்னும் முடிவாகவில்லை என்பதற்குச் சாட்சியாகச் சில மோதல்களும் அரங்கேறி வருகின்றன. ஆதவ் அர்ஜுன் கேட்ட அதே மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறையை நிர்மல் குமாரும் குறிவைக்கிறாராம். இருவரில் யாருக்கு ‘லக்’ அடிக்கும் என்பது சஸ்பென்ஸ். அதேபோல், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையை (PWD & Highways) எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அருண்ராஜ் தரப்போ வணிகவரி மற்றும் உணவுத் துறையைப் பெறத் தீவிரமாகப் போராடி வருகிறது.


















