Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.10 லட்சம் கேட்டு பெண் மிரட்டியதால்ஏழை வியாபாரி தற்கொலை – 3 பேர் கைது

ரூ.10 லட்சம் கேட்டு பெண் மிரட்டியதால்ஏழை வியாபாரி தற்கொலை – 3 பேர் கைது

பெங்களூரு: ஜூன் 20-
பெங்களூரு காடுகோடி அடுத்த சன்னசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் பாபண்ணா. இவர் அந்தப் பகுதியில் சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு ஏழை வியாபாரி ஆவார். இவரது குடும்பத்தில் இவர் ஒருவரே வேலைக்குச் சென்று ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நயனா என்ற பெண், வியாபாரி பாபண்ணா மீது சாதி வன்கொடுமை (அட்ராசிட்டி) சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்துள்ளார். பின்னர், அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி பாபண்ணாவிற்கு கடுமையான நெருக்கடியும், மன உளைச்சலும் கொடுத்து வந்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டிலும் இதே நயனா, பாபண்ணா மீது ஒரு போலி வழக்கைப் போட்டு, அதை வாபஸ் பெற ரூ.10 லட்சம் வரை வாங்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக போலி வழக்குப் போட்டு அந்த கும்பல் மிரட்டியுள்ளது.இதனால் செய்வதறியாது திகைத்த பாபண்ணா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். தூக்கிட்டு உயிரை மாய்ப்பதற்கு முன்பாக அவர் தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், “நயனா என்ற பெண் என் மீது பொய் சாதி வன்கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை வாபஸ் பெற ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். நான் ஒரு ஏழை வியாபாரி, என் வீட்டில் யாரும் வேலைக்குச் செல்வதில்லை. இந்த போலி கும்பலிடம் இருந்து என் குடும்பத்தையும், என் தங்கையையும் காப்பாற்றுங்கள்” என்று கண்ணீருடன் கதறி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாபண்ணா தற்கொலை குறித்து அறிந்த அவரது தங்கை பாக்யஸ்ரீ, காடுகோடி காவல் நிலையத்தில் நயனா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பாபண்ணாவின் மரணத்திற்கு காரணமான ஜோகி சீனா, பிரசாந்த், சந்தோஷ் ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பெண் நயனாவை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.