
அகமதாபாத், மே 23- ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் 230 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குஜராத் அணியின் பந்துவீச்சில் முகது சிராஜ், காகிசோ ரபாடா, ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். குஜராத் அணிக்கு இது 9-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி லீக் சுற்றை முதல் 2 இடங்களுக்குள் நிறைவு செய்வதை உறுதி செய்துள்ளது. ஏனெனில் குஜராத் அணியின் நிகர ரன் ரேட் 0.695 ஆக உள்ளது. 14 ஆட்டங்களில் விளையாடி உள்ள குஜராத் அணி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது. அதேவேளையில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி இந்த தோல்வியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி 14 ஆட்டங்களில் 6 வெற்றி, 8 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் கூறியதாவது: ஒவ்வொரு அணிக்கும் மேம்படுத்த வேண்டிய சில சிறிய விஷயங்களும் இருக்கும், அதே நேரத்தில் மிகவும் வலுவான சில பகுதிகளும் இருக்கும். எந்த அணியும் 100 சதவீதம் முழுமையான, கச்சிதமான அணியாக இருக்க முடியாது. உங்களிடம் எவ்வளவு சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இந்தத் தொடர் முழுவதும் எங்களது நடுவரிசை பேட்டிங் குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. ஆனால், இப்போது ஒவ்வொரு வீரரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள், அதுதான் மிகவும் முக்கியம். துல்லியமாக இல்லாத அந்த 10 சதவீதம் அல்லது 15 சதவீத விஷயங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால், அது மீதமுள்ள 70 முதல் 75 சதவீத அல்லது 80 சதவீத விஷயங்களையும் நிச்சயம் பாதிக்கும். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் விஷயங்களை மிகவும் எளிமையாக வைத்திருக்கிறோம். எதிரணி யாராக இருந்தாலும் சரி, களத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் சரி, எவ்வாறு அதிக தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்பதுதான் முக்கியம். அது பேட்டிங், பந்துவீச்சு அல்லது ஃபீல்டிங் என எதுவாகவும் இருக்கலாம். எனவே எங்கே பலவீனமாக இருக்கிறோம், எங்கே வலுவாக இருக்கிறோம் என்பதைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். நமக்கு முன்னால் என்ன இருக்கிறது, அணிக்கு நான் எப்படி சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைப் பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்.





















