
மும்பை, மே 23- 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள முதல் 2 அணிகள் எவை என்பது உறுதியாகியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள், மே 26-ம் தேதி நடைபெற உள்ள முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் நேருக்கு நேர் மோத உள்ளன. இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள அழகான மலைப்பகுதி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. பிளே-ஆப் உறுதி செய்த அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகள் தலா 18 புள்ளிகளுடன் பிளே-ஆப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிட்டன. ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி முதலிடத்திலும், குஜராத் அணி 2-வது இடத்திலும் உள்ளன. இதனால் இவ்விரு அணிகளும் முதலாவது தகுதிச் சுற்றில் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல மற்றொரு வாய்ப்பு (தகுதிச் சுற்று 2) வழங்கப்படும். 4-வது இடத்திற்கு கடும் போட்டி கடைசி 4-வது இடத்தைப் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையப்போகும் அந்த ஒரு அணி எது என்பதில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால், எந்தவித சிக்கலும் இன்றி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ராஜஸ்தான் தோற்றால், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு நூலிழையில் வாய்ப்பு கிடைக்கும்.





















