
ஜம்மு: அக். 1-
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஹாஷிம் மூஸா, காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய ராணுவத்தின் 15 சினார் படைப் பிரிவு, காஷ்மீர் போலீஸார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) அடங்கிய பாதுகாப்புப் படையினர், நேற்றுமுன்தினம் இரவு குர்வெத் கலான் பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஹாஷிம் மூஸா உயிரிழந்தார்.சம்பவ இடத்திலிருந்து ஏகே-47 துப்பாக்கி மற்றும் மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஆசிப் ஃபவுஜி, சுலைமான் ஆகிய பெயர்களாலும் அறியப்பட்ட ஹாஷிம் மூஸா, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













