
சென்னை: ஏப்ரல் 27-
ஐஸ்கிரீமில் சுவையூட்டிகள் போன்ற கலப்படங்களைத் தடுக்கும் வகையில், ஐஸ்கிரீம் தயாரிப்பை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உரிய உரிமம் இன்றி ஐஸ்கிரீம் தயாரிப்பது, லாப நோக்கில் கலப்படங்களைச் செய்வது போன்ற முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரது உடல்நலமும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி இயற்கை சர்க்கரைக்கு மாறாக தரம் குறைந்த சுவையூட்டிகள், செயற்கை நிறமிகள் மற்றும் ஆபத்தான வேதிப்பொருட்களை கலப்பது, குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் மற்றும் சலவைத்தூள் கூட்டுப் பொருட்களைச் சேர்ப்பது, தயாரிப்புக்கு சுகாதாரமற்ற நீரைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ஐஸ்கிரீம், குளிர்பான உற்பத்தி நிறுவனங்களில் தொடர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




















