
சிமோகா: அக். 8-
பெங்களூருவில் இருந்து சாகரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பஸ் ஒன்று, ஆனந்தபுரா அருகே உள்ள மும்பாலு கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
பெங்களூரு – ஹொன்னாவரா தேசிய நெடுஞ்சாலை-206-ல் பஸ் சென்று கொண்டிருந்தபோது, மின்கசிவு (ஷார்ட் சர்க்கியூட்) காரணமாக தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. நொடிப் பொழுதில் பஸ் முழுவதும் தீ பரவி முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.
பஸ்ஸில் தீப் பிடித்ததை உடனடியாகக் கவனித்த டிரைவர் மற்றும் கிளீனர், சாதுரியமாகச் செயல்பட்டு பயணிகளை உடனடியாக கீழே இறக்கினர். பெரும்பாலான பயணிகள் முன்னதாகவே சிவாமோகாவில் இறங்கிவிட்டனர். சாகரா நோக்கி 2 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.
பஸ்ஸில் அதிக அளவில் பயணிகள் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனந்தபுரா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.













