Home மாவட்டங்கள் பெங்களூர் கணவனை கொன்ற மனைவி கள்ளக் காதலன் உடன் கைது

கணவனை கொன்ற மனைவி கள்ளக் காதலன் உடன் கைது

பெங்களூரு: செப். 12-
கள்ளக்காதலன் மற்றும் தன் தாயாருடன் சேர்ந்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையிலிருந்த கணவனை மூச்சுத்திணறடித்தும் பிறப்புறுப்பில் உதைத்தும் மனைவியே கொலை செய்த சம்பவம் ஆவலஹள்ளியின் கித்தகனூர் அருகே நடந்துள்ளது.கித்தகனூர் யல்லப்பா கார்டனைச் சேர்ந்த முபாரக் என்பவரே கொலையானவராவார். இக்கொலையைச் செய்த மனைவி ஷஹீனா பானு, அவரது தாய் ஹஸீனா ஜான் மற்றும் கள்ளக்காதலன் நஹீம் உத்தீன் குரேஷி ஆகிய மூவரையும் கைது செய்த ஆவலஹள்ளி காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு, கித்தகனூர் யல்லப்பா கார்டனில் உள்ள வீட்டில் மனைவி தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு, மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். எனினும், உடற்கூறாய்வில் (Post-mortem) முபாரக் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.