
லண்டன்: செப். 12:
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச ரேசிங் சர்க்யூட் பந்தயக் களத்தில் ‘மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை’ கார் பந்தயத் தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியின் தொடக்க நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அவர் பச்சைக்கொடி அசைத்து பந்தயத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார். இதே பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியாளராகக் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அஜித்குமார் கூறியதாவது: “திரைத்துறையில் நாங்கள் சக நடிகர்களாக இருக்கிறோம். விஜய் முதலமைச்சர் ஆனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனது பிசியான பணிச் சூழலுக்கிடையே, என்னுடைய அழைப்பின் பேரில் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத் தொடரைத் தொடங்கி வைக்க முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக அவர் நிறைய செய்கிறார். லண்டனில் உள்ள ‘சில்வர்ஸ்டோன்’ ரேஸிங் டிராக் போன்ற ஒன்றை சென்னையில் உருவாக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம். லண்டனில் நடைபெறுவது போன்ற போட்டிகள் சென்னையிலும் நடைபெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்றார்.













