காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்

வாஷிங்டன், பிப். 14- காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய முயற்சித்ததாக கைதான இந்தியர் நிகில் குப்தா, தன் மீதான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியா தூண்டுதலின் பேரில் இந்த கொலை முயற்சி நடைபெற்றதாக ஆதாரமின்றி அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்த நிலையில், நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீக்கியர்களுக்கு என தனி நாடு கோரும் காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. காலிஸ்தான் அமைப்பினர் கனடா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்தபடியே இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டிவிட்டு வருகின்றனர். சீக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை கனடாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு சீக்கிய பயங்கரவாதி நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாதான் இதனை ஏஜெண்டுகள் மூலம் செய்ததாக கனடா குற்றம் சாட்டியது. இதன் காரணமாக இந்தியா – கனடா உறவு சீர்குலைந்து போனது. இந்த நிலையில், அமெரிக்கா- கனடா குடியுரிமை பெற்றவரும் அமெரிக்காவில் வசிப்பவருமான காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த்சிங் பன்னூனை கொலை செய்ய சதி நடைபெற்றது. இதனை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது. இவ்விவகாரம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் செக் குடியரசு நாட்டில் இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா என்பவர் கைது செய்யப்பட்டார். ஒப்புக்கொண்ட நிகில் குப்தா பன்னுனை கொலை செய்ய இந்தியாவின் ரா உளவு அமைப்பை சேர்ந்த முன்னாள் அதிகாரி விகாஸ் யாதவ் சதி திட்டம் தீட்டியதாகவும் இந்த கொலை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியது. நிகில் குப்தா மீதான வழக்கு அமெரிக்காவில் உள்ள மன்ஹட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. தன் மீதான வழக்கில், ஃபெடரல் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை நிகில் குப்தா ஒப்புக்கொண்டார். கொலைச் சதி, கொலைச் சதிக்கு உடந்தையாக இருத்தல், மற்றும் பணமோசடிச் சதி ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி சாரா நெட்பர்ன் முன்பு நிகில் குப்தா ஒப்புக்கொண்டார்.