
புதுடெல்லி: ஆக. 25-
காவிரியில் தமிழகத்துக்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, தமிழகத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய காவிரி நீர் முழுமையாக கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடகம் நீரை திறந்து விட்டுள்ளதாக கூறுகிறது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரவுகளை பார்க்கும்போது, தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு நீர் வருவதில் பிரச்சினை இல்லை என்பது தெரிகிறது. அவ்வாறு இருக்கும்போது நீர் வரவில்லை என எப்படி கூறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விகிதாச்சார அடிப்படையில் நீர் திறக்க உத்தரவிடுவதில்லை. இதன் காரணமாகவே, தமிழகத்துக்கு தற்போது நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகி முறையிடுவதுதானே சரியான நடைமுறை என தெரிவித்தனர். ஆனால் தமிழக அரசு தரப்பில், செவ்வாய்க்கிழமை (இன்று) காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், கர்நாடக அணைகளில் 78 டிஎம்சி-க்கும் அதிகமாக நீர் இருந்தும் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க மறுத்து வருவதாகவும், எனவே, உச்ச நீதிமன்றத்தால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரை கர்நாடகம் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது இதையடுத்து நீதிபதிகள், அணைகளில் உரிய தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, இதுகுறித்து தரவுகளுடன் உரிய விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள், தற்போது இரு மாநிலங்களின் வாதங்களையும் கேட்கப் போவதில்லை என தெரிவித்ததோடு, தமிழக அரசு தங்களது கூடுதல் கோரிக்கைகள் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம் என அறிவுறுத்தினர். மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை என்றால், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரையிலான காலகட்டத்தில் கர்நாடகம் திறந்த நீரின் அளவு மற்றும் தமிழகத்துக்கு கிடைக்கப்பெற்ற நீரின் அளவு உள்ளிட்ட தரவுகளை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.













