
பெங்களூரு: ஆக. 25-
சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, காவேரி வனப்பகுதியில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளையும் சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) டாக்டர் எம்.ஏ. சலீம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ராமபுரா, ஹனூர் மற்றும் கொள்ளேகால் கிராமப்புற காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வனத்துறையினர் மீதான தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் வனத்துறை முகாம்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் இனி சி.ஐ.டி. வசமாகின்றன.
வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி, ஜான் பீட்டர் மற்றும் டேவிட் குமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் வேட்டையாடும் நோக்கத்துடனேயே நாட்டுத் துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் நுழைந்ததாக வனத்துறையினர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்தபோது, அந்தோணிசாமி மற்றும் ஜான் பீட்டர் ஆகியோரின் உள்ளாடைகளில் நாட்டுத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 5 அலுமினியம் வெடிமருந்து கேப்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வனத்துறை தெரிவித்தது.
மைசூர் கே.ஆர். மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், உயிரிழந்தவர்களின் உடைகள் மற்றும் தோலில் வெடிமருந்து புகையின் கருமை நிறக் கறைகளும், சுட்ட காயங்களும் காணப்படுகின்றன. இதன்மூலம் மிகவும் அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
மாடுகளைத் தேடிச் சென்ற அப்பாவி மக்களை வனத்துறையினர் பிடித்து, வேண்டுமென்றே அருகில் வைத்து சுட்டுக் கொன்றுவிட்டதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், உள்ளூர் விவசாயிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை இவர்களின் வாதத்திற்கு வலுசேர்த்துள்ளதால், சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தற்காப்புக்காகவே சுட்டதாக வனத்துறை தொடர்ந்து கூறி வரும் நிலையில், சி.ஐ.டி. விசாரணையின் பிறகே இதில் உள்ள முழு உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.













