
டெல்லி, ஆக. 1- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா – மனைவி பாயல் அப்துல்லா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக இருவரும் மாறி மாறி வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் பேசி தீர்த்து விட்டதாக உச்சநீதிமன்றத்தில் கூறிய நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருப்பவர் உமர் அப்துல்லா. இவருக்கும் டெல்லியை சேர்ந்த பாயல் அப்துல்லா என்ற பெண்ணுக்கும், கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 2009ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர்.
உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலையில் அவரது மனைவி பாயல் அப்துல்லா தனது 2 மகன்களுடன் டெல்லி வந்தார். இதற்கிடையே தான் உமர் அப்துல்லா சார்பில் மனைவி பாயல் அப்துல்லாவிடம் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது உமர் அப்துல்லா சார்பில், ‘’திருமண உறவு மீள முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது. மனைவி கொடுமைப்படுத்துகிறார். 2007ம் ஆண்டு முதல் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை மனைவியின் நடத்தை மனஉளைச்சலையும், வேதனையும் கொடுத்தது’’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துவிட்டது. மனைவி பாயல் அப்துல்லா கொடுமைப்படுத்துவதாக உமர் அப்துல்லா கூறியும் அதனை நிரூபிக்க தவறிவிட்டார் என்று கூறி கடந்த 2016ம் ஆண்டில் விவாகரத்து வழங்க மறுத்து குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உமர் அப்துல்லா சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.













