Home மாவட்டங்கள் பெங்களூர் வாட்ஸ்அப் மூலம் போலி வருமான வரி நோட்டீஸ்

வாட்ஸ்அப் மூலம் போலி வருமான வரி நோட்டீஸ்

பெங்களூரு: ஆக. 1-
வருமான வரி தாக்கல் செய்யும் இந்த நேரத்தில், வாட்ஸ்அப் வழியாக போலி வருமான வரி நோட்டீஸ் அனுப்பி வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடும் புதிய மோசடி நடந்து வருகிறது. பெங்களூரை சேர்ந்த ‘கிளவுட்செக்’ என்ற பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
மோசடி செய்பவர்கள் அனுப்பும் வாட்ஸ்அப் செய்தியில், அரசு முத்திரையுடன் கூடிய கடிதம் இருக்கும். அதில், “உங்கள் வருமான வரியில் தவறு உள்ளது. 72 மணி நேரத்திற்குள் பதில் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பயமுறுத்துவார்கள். அதோடு ITD.zip என்ற ஆபத்தான ஃபைலையும் இணைத்து அனுப்புவார்கள். அதை திறந்து பார்த்தவுடனே செல்போன் அல்லது கணினி ஹேக்கர்கள் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும்.
இதன் மூலம் போனுக்கு வரும் வங்கி மெசேஜ்கள், ஓ.டி.பி. எண்களை திருடி கணக்கில் உள்ள பணத்தை சுருட்டி விடுகிறார்கள். மேலும், போலி இணையதள லிங்க் அனுப்பி பான், ஆதார் விவரங்களையும் திருடுகிறார்கள்.
வருமான வரித்துறை ஒருபோதும் வாட்ஸ்அப்பில் ஃபைல்களை அனுப்பி நோட்டீஸ் கேட்காது. எனவே, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் எந்த ஃபைலையும் திறக்க வேண்டாம். சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ e-Filing இணையதளத்தில் சரிபார்க்கலாம். ஒருவேளை பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற இலவச சைபர் கிரைம் எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.