Home மாவட்டங்கள் பெங்களூர் குப்பை வாகனங்களில் ஜி.பி.எஸ். கட்டாயம் – லோக் ஆயுக்தா அதிரடி உத்தரவு

குப்பை வாகனங்களில் ஜி.பி.எஸ். கட்டாயம் – லோக் ஆயுக்தா அதிரடி உத்தரவு

பெங்களூரு: ஆக. 1-
பெங்களூரு நகரில் திடக்கழிவு மேலாண்மை முறையை வலுப்படுத்தவும், குப்பை கொட்டப்படும் ‘பிளாக் ஸ்பாட்’ இடங்களை அகற்றவும் கர்நாடக லோக் ஆயுக்தா முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
நகரில் குப்பை சேகரிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுவதை லோக் ஆயுக்தா கட்டாயமாக்கியுள்ளது. ஜி.பி.எஸ். வசதி இல்லாத பழைய வாகனங்களை உடனடியாகப் பணியில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
குப்பை லாரிகளை முழுமையாகப் பயன்படுத்த ஏதுவாக, ஒப்பந்த அல்லது தற்காலிக டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு லோக் ஆயுக்தா உத்தரவிட்டுள்ளத
கிரேட்டர் பெங்களூரு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அறிவியல் முறையின்றி குப்பை கொட்டுவது தொடர்பாகத் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை விசாரித்தபோது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக அளிக்கப்பட்ட அறிவுறுத்தல்களால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாததற்கு லோக் ஆயுக்தா அதிருப்தி தெரிவித்தது.
மேலும், குப்பை மேடுகளை ஒழிக்க ஆகஸ்ட் 15-ஆம் தேதியை புதிய கெடுவாக லோக் ஆயுக்தா நிர்ணயித்துள்ளது. இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், லோக் ஆயுக்தா உத்தரவின்படி ஆகஸ்ட் 15-க்குள் நகரம் முழுவதும் 1,000 குப்பை மறுசுழற்சி/சாதன மையங்கள் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.