Home செய்திகள் உலக செய்திகள் குச்சி போல முளைக்கும் “இமயமலை வயாக்ரா

குச்சி போல முளைக்கும் “இமயமலை வயாக்ரா

காத்மண்டு, ஜூன் 19- இமயமலையில் உள்ள ஒரு விசித்திரமான பூஞ்சை அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போடுகிறது. இமயமலை தங்கம் என்று அழைக்கப்படும் இதை கண்டுபிடிக்க அங்குப் பல நூறு கிராமங்கள் தேடி அலைவார்களாம்.இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களில், இயற்கையின் ஒரு விசித்திரமான படைப்பு ஏற்படுகிறது. அதன் பெயர் ‘யார்சா கும்பா’ (Yarsa Gumba). அப்பகுதி மக்கள் இதை ‘கீடா ஜாடி’ (Keeda Jadi) என்றும் அழைக்கிறார்கள். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு தங்கத்திற்கு நிகராக இருப்பதால், இது ‘இமயமலையின் தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பூஞ்சை மற்றும் ஒரு கம்பளிப்பூச்சியின் விசித்திரமான கலவையாகும். ‘கோஸ்ட் மாத்’ எனப்படும் இது மண்ணுக்கு அடியில் இருக்கும்போது, ‘கார்டிசெப்ஸ் சைனென்சிஸ்’ (Cordyceps sinensis) என்ற பூஞ்சை அவற்றைத் தாக்குகிறது. அந்தப் பூஞ்சை கம்பளிப்பூச்சியின் உடலுக்குள்ளேயே வளர்ந்து, மெல்ல மெல்ல அதைக் கொன்று, அதன் தலையிலிருந்து ஒரு சிறிய செடி போல வெளியே நீட்டிக்கொண்டு வளரும். இது பார்ப்பதற்கு ஒரு சிறிய காய்ந்த குச்சி போலத் தோற்றமளிக்கும். சீனா போன்ற நாடுகளின் சந்தையில், ஒரு கிலோ யார்சா கும்பா 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. இதன் மருத்துவ குணங்களுக்காக இது ‘இமயமலையின் வயாக்ரா’ என்றும் அழைக்கப்படுகிறது. யார்சா கும்பா வளர்வதற்கு இயற்கை மிகவும் அரிதான மற்றும் குறிப்பிட்ட சூழல் தேவைப்படுகிறது. இத்தகைய சூழல் நேபாளம் மற்றும் திபெத் போன்ற இமயமலைப் பகுதிகளில் மட்டுமே நிலவுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 3,500 முதல் 5,000 மீட்டர் (11,000 முதல் 16,000 அடி) உயரத்தில் உள்ள புல்வெளிகளில் மட்டுமே வளரும். இந்த உயரத்திற்கு மேலேயோ அல்லது கீழேயோ பூஞ்சையாலோ அல்லது கம்பளிப்பூச்சியாலோ உயிர்வாழ முடியாது. குளிர்காலத்தில் வெப்பநிலை -10 டிகிரி முதல் -20 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். அப்போது பெய்யும் கடும் பனிப்பொழிவு மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கும். இந்த உறைபனியில்தான் பூஞ்சை சுறுசுறுப்பாகி கம்பளிப்பூச்சிகளைத் தாக்குகிறது. கோஸ்ட் மாத் கம்பளிப்பூச்சிகள் இமயமலையின் குளிர்ந்த அதேநேரம் வறண்டு இருக்கும் மண்ணில் மட்டுமே வாழ்கின்றன. இவை இல்லையென்றால் யார்சா கும்பா உருவாக வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் மே முதல் ஜூலை வரையிலான கால பகுதியில், நேபாளத்தில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் அப்படியே காலியாகிவிடும். அவர்கள் மொத்தமாக இந்த யார்சா கும்பாவை தேடி கிளம்பிவிடுவார்கள். ஏனென்றால் இந்த மலைப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் மிகக் குறைவு. விவசாயம் வாழ்வாதாரத்திற்குப் போதுமானதாக இருப்பதில்லை. இந்த இரண்டு மாத கால அறுவடையில் ஒரு நபர் சம்பாதிக்கும் பணம், அவர் ஒரு வருடம் முழுவதும் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் பள்ளிகள் கூட மூடப்பட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மலைக்குச் சென்றுவிடுகிறார்கள். குடும்ப குடும்பமாக! பனி உருகத் தொடங்கும் வசந்த காலத்தில் மட்டுமே இது மண்ணிலிருந்து வெளியே தெரியும். அந்தச் சில வாரங்களுக்குள் இதைக் கண்டுபிடிக்காவிட்டால், அது அழுகிவிடும் அல்லது காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டுவிடும். இது புற்களுக்கு இடையே ஒரு சிறிய பழுப்பு நிறத் தண்டு போல மறைந்திருக்கும். இதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மக்கள் தரையில் படுத்துக்கொண்டு, ஊர்ந்து சென்றுதான் இதை தேடுவார்கள். கூர்மையான பார்வை கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது எளிதாகத் தென்படும் என்பதால் குடும்பமே ஒன்றாக சேர்ந்து இதைத் தேடுவார்கள்.