
ஜெனீவா: ஜூன் 19-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதியானது என்று ஐநாவில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை வன்மையாக கண்டித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 62வது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் அனுபமா சிங் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்தார். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன் சர்வதேச மன்றங்களில் இருதரப்பு பிரச்னைகளை எழுப்ப பாகிஸ்தான் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளையும் விமர்சித்தார். அவர் பேசியதாவது:
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த எங்கள் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே. பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒருநாடு, நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடிப்படையில் அமைந்த ஒத்துழைப்பின் சலுகைகளை கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. இது முரணானது. தொடர்ந்து அந்த ஒப்பந்தம் இப்போது காலாவதி ஆகிவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பயங்கரவாதத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் ஒரு நாடு, நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடிப்படையிலான ஒப்பந்தத்தின் பலன்களை எதிர்பார்க்க முடியாது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சிந்து நீர் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே நதிநீரைப் பகிர்ந்தளிப்பதற்கான ஒப்பந்தமாகும். பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பாக் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















